Credit card Fees and Interest Rate in Tamil • Explanation • TNEGUYS

 நம்மில் பலருக்கு கடன் வாங்குவது பிடிக்காது, ஆனால் நமக்கு பிடித்த பொருளை வாங்குவதற்கு நமக்கு பிடிக்கும். நமக்கு பிடித்த பொருளை வாங்க நம்மிடம் பணம் இல்லை என்கிற போது நாம் கடன் வாங்கி அந்த பொருளை வாங்கி வைத்துக் கொள்வோம். என்னடா கடன் கடன் என்று திரும்பி திரும்பி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா,  ஆம், இன்று நாம் கடன் சார்ந்த ஒன்றை பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம். 

அதாவது இன்று, நாம் கடன் அட்டை  (Credit Card) பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.


கடன் அட்டை (Credit card)...

ஒரு நிதி நிறுவனம் கடனை நமக்கு பணமாக தராமல் ஒரு அட்டையின் வாயிலாக தருகிறது. இந்த அட்டை தான் கடன் அட்டை (credit card). 

மேலும், இந்த கடன் அட்டையை பயன்படுத்தி நாம் ஏதேனும் பொருட்கள் வாங்கினால் நமக்கு தள்ளுபடி மற்றும் இன்னும் சில பயன்கள் கிடைக்கும். அது மட்டுமல்லாது நாம் பயன்படுத்திய பணத்தை திருப்பி செலுத்த அந்த நிறுவனம் நமக்கு ஒரு வட்டி இல்ல காலத்தையும் (Grace Period) நமக்கு தருகிறது. ஆனால், எந்த ஒரு நிறுவனமும் லாப நோக்கத்தில், தானே செயல்படும். அது தானே உலக வழக்கம்.‌ அது போல தான், இந்த நிறுவனங்களும் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் தனக்கான லாபத்தை தனது நிறுவனத்தின் கடன் அட்டையை (Credit card) சரியாக பயன்படுத்த தெரியாத வாடிக்கையாளரின் இருந்து கட்டணமாகவும், வட்டியாகவும் பெறுகின்றது.

 அது பற்றி சற்று விரிவாக பார்ப்போம்....


வருடாந்திர கட்டணம் (Annual Fees)...

நாம் ஒரு கடன் அட்டையை (Credit card) வாங்கினால் அந்த கடன் அட்டையை பாராமரிப்பதற்க்காக ஆண்டுக்கு ஒரு கட்டணம்  விதிப்பார்கள். இது தான் ஆண்டுக்கு கட்டணம் அல்லது பாரமரிப்பு கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம்.

     இந்த வருடாந்திர கட்டணம் நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். சில நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கள் நிறுவனத்தின்  கடன் (Credit card) அட்டையை பயன்படுத்தி விட்டால் அவர்களுக்கு இந்த பாரமரிப்பு கட்டணம் கிடையாது என்று சொல்கிறார்கள்.

வட்டி விகிதம் (Interest Rate)...

 நாம் ஒரு நிறுவனத்தின் கடன் அட்டையை (Credit card) பயன்படுத்தினால் அந்த பணத்தை திருப்பி செலுத்த அந்த நிறுவனம்  இரு வழிகளை கூறும். ஒன்று முழுவதுமாக செலுத்துவது (Full Amount Pay), மற்றொன்று குறைந்த பட்ச கட்டணம் செலுத்துவது (Minimum Amount Pay). நாம் முழுவதுமாக செலுத்தினால் நமக்கு எந்த வித வட்டியோ கட்டணமோ போட மாட்டார்கள். 

  ஆனால் குறைந்த பட்ச பணத்தை (Minimum Amount Pay) மட்டும் செலுத்தி மீத பணத்தை செலுத்தவில்லை என்றால் நமக்கு நாம் செலுத்தாத பணத்திற்கு வட்டி போடுவார்கள். மாதத்திற்கு 3% முதல் 4% என்ற அளவுக்கு வட்டி விதிப்பார்கள். வருடத்திற்கு 36% இருந்து 48% வரை வரும். இது மிகவும் அதிகமான வட்டி. வேறு எந்த வகை கடனிலும் இந்த அளவுக்கு உங்களுக்கு வட்டி இருக்காது. அது மட்டுமல்லாது எந்த ஒரு முதலீடும் இந்த அளவுக்கு வருமானத்தையும் உங்களுக்கு தராது. 

இதில், இன்னொரு விசயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அது என்ன வென்றால் நாம் குறைந்த பட்ச கட்டணத்தை மட்டும் செலுத்தினால் மீதமுள்ள பணத்திற்கு மட்டும் நமக்கு வட்டி போட மாட்டார்கள். அதற்கு மாறாக அந்த மாதம் மீதமுள்ள பணத்திற்கும் அதற்கு அடுத்த மாதம் நாம் செலவழித்த பணத்திற்கு சேர்த்து வட்டி போடுவார்கள். மாதம் 3% லிருந்த 4% இது மிகவும் அதிகமான வட்டி. 

அதனால், இதை நீங்கள் கட்டாயமாக கவனித்தில் கொள்ள வேண்டும்.‌ கடன் அட்டை (Credit card) பயன்படுத்தினால் நாம் செலவழித்த அனைத்து பணத்தையும் முழுவதுமாக செலுத்தி விட வேண்டும். இல்லையெனில் கடன் அட்டை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

தாமத கட்டணம் (Late Payment Fee)...

     மேலே சொன்னது போல, நாம் கடன் அட்டை வழியாக பயன்படுத்திய பணத்தை திருப்பி செலுத்த இரு வழிகள் உண்டு. ஒன்று முழுவதும் செலுத்துவது (Full Amount Pay) மற்றொன்று குறைந்த பட்சம் செலுத்துவது (Minimum Amount Pay).                                                                                 இவற்றில், எதையும் நாம் அந்த கடன் அட்டை நிறுவனம் (Credit card Company) குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த வில்லை என்றால் நமக்கு தாமத கட்டணமானது விதிக்கப்படும். இது நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். கடன் அட்டையை பயன்படுத்தினால்  அதற்கான பணத்தை சரியான நேரத்தில் செலுத்துவது மிகவும் முக்கியம். இல்லையெனில், தாமதம் கட்டணம் (Late Payment Fee) செலுத்த வேண்டி வரும்.

Over limit Fee (வரம்புக்கு மீறி செலவழித்த கட்டணம்)...

நாம் ஒரு கடன் அட்டையை (Credit card)  வாங்கும் போது, நம்முடைய வருமானத்தை பொறுத்து நமக்கு பணம் செலவழிக்க வரம்பு ஒன்றை அந்த கடன் அட்டை நிறுவனம் கூறும். 

 இந்த வரம்பானது வாடிக்கையாளர்களின் தன்மையை பொறுத்து மாறுபடும். இந்த வரம்பை தாண்டி நாம் செலவழித்தால் நாம் செலவழித்த பணத்திற்கு நமக்கு ஒரு கட்டணம் விதிப்பார்கள் அது தான் வரம்புக்கு மீறி செலவழித்த கட்டணம்(Over Limit Fee). இதுவும் நிறுவனங்களை பொறுத்து மாறுபடும். இதையும் நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

ATM வழியாக பணம் எடுத்தல் கட்டணம் (ATM Withdrawal Fee)...

நாம் ஒரு நிறுவனத்தின் கடன் அட்டையை (Credit card) பயன்படுத்தி ATM  வழியாக பணம் எடுக்க (withdrawal) முடியும். அவ்வாறு, நாம் பணம் எடுத்தல் நமக்கு நாம் எடுத்த பணத்திற்கு கட்டணம் விதிப்பார்கள். அது தான் ATM வழியாக பணம் எடுத்தல் கட்டணம் (ATM Withdrawal Fee)

அது மட்டுமல்லாது, நாம் ATM வழியாக பணம் எடுத்தது முதல் நமக்கு வட்டியானது விதிக்கப்படும். அதாவது, அந்த மாதம் நாம் முதன் முதலாக செலவழித்த பணத்தில் இருந்து அந்த மாதம் முழுவதும் நாம் கடன் அட்டை மூலம் செலவழிக்கும அனைத்து பணத்திற்கும் வட்டியானது விதிக்கப்படும்.  அதாவது நமக்கு கடன் அட்டை மூலம் கிடைக்கும் வட்டி இல்ல காலம் (Grace Period) கிடைக்காது. அதனால், கடன் அட்டையை பயன்படுத்தி ATM வழியாக பணம் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். அப்படி இல்லை என்றால் நமக்கு கட்டணமும் விதிப்பார்கள் வட்டியும் போடுவார்கள். 

கூடுதல் கட்டணம் (Surcharge)...

நாம் நம்முடைய கடன் அட்டையை (Credit card) பயன்படுத்தி பெட்ரோல் கட்டணம் செலுத்தல் , Railway Ticket book செய்தல் போன்றவற்றை செய்தால் நமக்கு ஒரு கூடுதல் கட்டணம் (Surcharge) விதிப்பார்கள். இதை தவிர்க்க நாம் இது சூழ்நிலைகளில்  பணத்தையோ அல்லது வேறு வழிகளையோ பின்பற்றினால் நாம் இந்த கூடுதல் கட்டணத்தை (Surcharge) தவிர்க்கலாம்.

மேலும், மேற்கண்ட கட்டணங்கள் (Fees) தவிர்த்து, இன்னும் சில கட்டணங்களும் கடன் அட்டையில் (Credit card) உள்ளது. குறிப்பாக, பணம் மாற்று கட்டணம் (Balance Transfer Fee) . அதாவது, நாம் நம்முடைய ஒரு கடன் அட்டையில் இருந்து  மற்றொரு கடன் அட்டைக்கு நம்முடைய பணத்தை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். இதற்கும் ஒரு கட்டணம் விதிப்பார்கள் அது தான் பணம் மாற்று கட்டணம் (Balance Transfer Fee). 

இது தவிர்த்து நம்முடைய பழைய கடன் அட்டையை (old credit card) புதிய அட்டையாக (New credit card) மாற்றுவதற்கும் கட்டணம் விதிப்பார்கள். இது போன்ற இன்னும் சிறிய நிறைய கட்டணங்கள் இந்த கடன் அட்டையில் உள்ளது. 

இவ்வளவு கட்டணங்கள் விதிக்கக் கூடிய கடன் அட்டையை (Credit card) நீங்கள் வாங்கி பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

இறுதியாக, ஒன்று "சிந்தித்து செயலாற்றுங்கள்"...


வாசிக்காமல் வலையொளியில் (YouTube) காண,







Powered by Blogger.